என்ன இது? தலைப்பே புரியவில்லை என்று தோன்றுகிறதா? கவலைப்படாதீர்கள்! புரியும்படிப் பார்த்து விடலாம்! இணையம் இல்லாமல் எந்தெந்த மென்பொருள்கள் (சாப்ட்வேர்) எல்லாம் இயங்காதோ, அவையெல்லாம் இணைய வழி இயங்கும் மென்பொருள்கள் தாம்! அப்படியானால், கணியம்.காம் என்பது இணையவழி இயங்கும் மென்பொருள் – சரிதானா என்கிறீர்களா? நூற்றுக்கு நூறு சரிதான்!
ஓர் இணையத்தளத்தையோ, வலைப்பூவையோ சோதிக்க வேண்டுமானால் அடிப்படையில் எதையெல்லாம் கவனம் எடுத்துப் பார்க்க வேண்டும் – அவற்றைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
1. பயன்பாட்டுச் சோதனை (‘Usability Test’)
இணையத்தளத்தைப் பொருத்தவரை, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்க வேண்டும். எளிமையான பயன்பாட்டு முறைக்காகப் பல்வேறு வழிமுறைகளை இணையத்தளங்கள் பின்பற்றி வருகின்றன. அந்த வழிமுறைகள் நாம் சோதிக்கும் இணையத்தளத்திலும் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். சில எளிய எடுத்துக்காட்டுகளை உங்களுக்குக் காட்டுகிறேன்.
அ. ஜிமெயில் போன்ற இணையத்தளங்களில் முகப்புப் பக்கத்தில், நீங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த பயனர் பெயர் கீழ்வரிசையில் தெரியும். நீங்கள் அந்த வரிசையில் இருந்து பயனர் பெயரைத் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஆ. கடவுச்சொல்லை நினைவில் கொள்க (‘Remember Password’) என்னும் தேர்வைக் கொடுப்பது.
இ. விண்ணப்பப் படிவங்களில் நாடுகளின் பெயர்கள், மாநிலங்களின் பெயர்கள், மாதங்கள் ஆகியவற்றைக் கீழ் வரிசைப் பட்டியலில் தருவது.

2. இணைப்புச் சோதனை (‘Link, Navigation Test’)
தலைப்பை வைத்தே ஓரளவு ஊகித்திருப்பீர்கள்! உங்கள் ஊகம் சரி தான்! இணையத்தளச் சோதனையில் மிகவும் முக்கியமானது இது! அதே வேளையில் ரொம்ப எளிதானதும் கூட!
இணையத்தளத்தை விட்டு விடுங்கள். ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். நீங்களும் உங்கள் நண்பரும் வண்டியில் நீண்ட தூரம் போய்ப் பார்க்க விரும்புகிறீர்கள். வண்டியை எடுத்துக் கொண்டு பல மைல் தூரம் போய் விட்டீர்கள். போன பிறகு அங்கிருந்து எப்படித் திரும்பி வருவது என்று தெரியவில்லை! ஏதாவது வழிகாட்டிப்பலகை, சாலையை ஒட்டி இருக்காதா, என்று பார்த்துக் கொண்டே வருவீர்கள் – அப்படித் தானே! அந்த வழிகாட்டிப் பலகை தான் உங்களைத் தொடங்கிய இடத்திற்கே கொண்டுவந்து சேர்க்க உதவும்! இதே தான் இணையத் தளத்திலும்!
1) நீங்கள் இணையத்தளத்தின் ஒரு பக்கத்தில் இருந்து எந்தெந்த இணைப்புகளையெல்லாமோ தொட்டுத் தொட்டு ஏதோ ஒரு பக்கத்திற்கு வந்து விட்டீர்கள்! வந்த பிறகு மீண்டும் முதல் பக்கத்திற்குப் போக வேண்டும் என்றால் என்ன செய்வது? சாலையில் வழிகாட்டிப் பலகை இருந்தது போல, இங்கும் வழிகாட்டிகள் இருக்க வேண்டாமா?
அப்படி வழிகாட்டிப் பலகையே இல்லை என்றால் நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து வெளியேற முடியாது தவிப்பீர்கள். இணையத்தில் இப்படி இணைப்புகளே இல்லாமல் தனித்து நிற்கும் இணையப்பக்கங்களுக்குத் தனிமரங்கள் (‘Orphan pages’) என்று பெயர்! இப்படித் தனிமரங்கள் இல்லாமல் உங்கள் இணையத் தளத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இணைப்புகள் இருந்தால், அந்த இணைப்புகள் சரியாக வேலை செய்ய வேண்டும். இணையத் தளத்தில் எந்த இணைப்பை (link) நீங்கள் தொடுகிறீர்களோ, அந்த இணைப்புக்கு நாம் போக வேண்டும். அப்படிப் போகவில்லை என்றாலோ, தவறான இணைப்புக்குப் போனாலோ தவறு! அதை உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்.
3. பாதுகாப்புச் சோதனை (‘Security Testing’)
இணையம் என்று வந்து விட்டாலே பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது! தகவல்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் இணையத்தைப் பயன்படுத்தவே முடியாது! எனவே தான் பாதுகாப்புச் சோதனை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அ) சரியான பயனர் பெயர், கடவுச் சொல்லுக்குத் தான் தகவல்கள் பகிரப்படுகின்றனவா
ஆ) பயனர் நிலைக்கு ஏற்ப, தேவையான அனுமதிகள் கொடுக்கப்படுகின்றனவா? எ.கா. ஒரு பயனர், நிர்வாகியாக இருந்தால், இணையத்தளத்தில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்ய அவருக்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும். அவரே சாதாரண பயனராக இருந்தால், பார்வை அனுமதி மட்டுமே போதுமானது.
இ) பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றைக் கேட்கும் இணையத்தளங்களின் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் முதலில் பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றைக் கேட்கிறதா? என்று பார்ப்பது.
4. உலவிப் பொருத்தச் சோதனை (‘Browser Compatibility Testing’)
பயனர் எந்தெந்த உலவிகளை (‘Browser’)ப் பயன்படுத்துகிறாரோ, அந்தந்த உலவிகளில் இணையத்தளம் ஒழுங்காகத் திறக்கிறதா? எல்லாப் படங்களும் சரியாகக் காட்டப்படுகின்றனவா? என்பனவற்றைச் சோதிக்க வேண்டும். அடிப்படை நிலையில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் உலவிகளான பயர்பாக்ஸ், குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவற்றின் அண்மைப் பதிப்புகளில் (latest versions) இணையத்தளம் ஒழுங்காகச் செயல்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
இப்போது அலைபேசிகள், சிறு கணினிகள் ஆகியன வந்து விட்டன. அந்தத் திரைகளிலும் இணையத் தளம் சரியாகத் திறக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.
5. தரவு சரிபார்ப்புச் சோதனை (‘Validation Testing’)
என்ன தலைப்பு இது என்று தலையைச் சொறிகிறீர்களா? எளிமையானது தான்! தரவு என்றால் பயனர் இணையத்தளத்தில் தரும் தகவல்! அந்தத் தகவல் சரியானதாக இருக்கிறதா, சரியான வடிவத்தில் இருக்கிறதா என்று பார்ப்பது தான் தரவு சரிபார்ப்புச் சோதனை!
➔ நீங்கள் கொடுக்கும் அலைபேசி எண், பத்து இலக்கங்களுடன் இருக்கிறதா என்று பார்ப்பது! அப்படி இல்லாவிட்டால் ‘பத்து இலக்கங்கள் இல்லை- தயவு செய்து சரிபாருங்கள்’ என்று செய்தி கொடுப்பது!
➔ ஒருவர் மின்னஞ்சலைக் கொடுத்தால் அது ‘@’, ‘.com’, ‘.co.in’, ‘.org’ என்பன போன்ற குறியீடுகளைக் கொண்டிருக்கிறதா என்று பார்ப்பது
➔ கடவுச்சொல் (‘Password’) கட்டம் காலியாக இருக்கக் கூடாது என்பது போன்ற சரி பார்ப்புகள்!
➔ ஆகியன தரவு சரிபார்ப்புச் சோதனைக்கான எளிய எடுத்துக்காட்டுகள்! சொன்னது போல் இச்சோதனை எளிதாகத் தானே இருக்கிறது?
6. செயல் திறன் சோதனை (‘Performance Testing‘)
பல இணையத்தளங்கள் மிகச் சிறப்பாக வேலை செய்யும். ஆனால் இணையத்தளத்தைத் திறப்பதற்கே பல நிமிடங்கள் ஆகும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இணைப்பைத் திறப்பதற்குள் நமக்குப் போதும் போதும் என்றாகி விடும்! இதையெல்லாம் எதிர்கொண்டிருக்கிறீர்களா? இதைத் தான் செயல் திறன் சோதனை என்று சொல்கிறோம். நம்முடைய கணினி நிறுவனம் ஓர் இணையத்தளத்தை உருவாக்குவதாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் அந்தத் தளத்தைப் பார்க்கும் போது தளத்தின் வேகம் எப்படி இருக்கிறது? இணையப்பக்கங்களைத் திறக்க எவ்வளவு நேரம் ஆகிறது? எல்லாப் படங்களும் ஒழுங்காகக் காட்டப்படுகின்றனவா? என்பன போன்றவற்றை ஆராய வேண்டும். இதுவே செயல்திறன் சோதனை (‘Performance Test’) என்று சொல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேரா? எப்படிப் பத்தாயிரம் பேரைத் திரட்டி இணையத்தளத்தைச் சோதிப்பது? என்று நீங்கள் சிந்திக்கலாம்! அப்படிப் பத்தாயிரம் பேர் தளத்தைப் பார்ப்பது போன்ற சூழலை உருவாக்க ஏராளமான செயல்திறன் சோதனை மென்பொருட்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் கட்டற்ற மென்பொருட்கள் இங்கும் கிடைக்கின்றன. ஜேமீட்டர் (‘JMeter‘) என்பது அவற்றுள் பலரும் அறிந்த கட்டற்ற மென்பொருள் ஆகும்.
நீங்கள் சொல்வதெல்லாம் புரிகிறது. ஆனால் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் மென்பொருள் சோதனை (சாப்ட்வேர் டெஸ்டிங்) என்பது எப்போது தொடங்கும்? நான் சாப்ட்வேர் டெஸ்டிங் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்? மென்பொருள் சோதனையாளராக (டெஸ்டராக) மாற, புரோகிராமிங் அறிவு தேவையா? இப்படிப் பல கேள்விகள் இருக்கின்றனவா? அவற்றையெல்லாம் பார்ப்போம் – இனி வரும் பதிவுகளில்!