சாப்ட்வேர் எங்கு தொடங்குகிறது? – 6

முந்தைய பதிவில் நாம் பார்த்த நகைக்கடைக்கு இணையத்தளம் என்னும் எடுத்துக்காட்டின் அடிப்படையில் இதைக் கொஞ்சம் பார்ப்போம்! முந்தைய பதிவைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு இப்பதிவிற்கு வாருங்கள்!

இதைப் பார்ப்பதற்கு முன்னர் அறிவொளியின் மகள் தமிழினியின் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோமே! அந்தப் பேச்சை முடித்து விடுவோமே! தமிழினியின் திருமணத்திற்குச் சமையல் வேலை செய்ய ஆள் தேடிக் கொண்டிருந்தோமே! நினைவிருக்கிறதா?

ஒவ்வொரு சமையல்காரரும் வந்து, எந்தத் தேதியில், எத்தனை பேருக்கு, என்னென்ன, எத்தனை வேளைகள் , எவ்வளவு செலவில் சமைக்க வேண்டும்? என்பன போன்ற விவரங்களைப் பேசுவார்கள் என்று பார்த்தோமே! சரி! நினைவுக்கு வந்திருக்கும். இப்போது உங்களிடம் சில கேள்விகள்!

  • மேலே உள்ள கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலைச் சமையல்காரர்களிடம் யாரால் சொல்ல முடியும்?
  • சமையல்காரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யாரால் சரியான பதில் சொல்ல முடியும்?

சொல்லுங்களேன்.

இதென்ன சாதாரண கேள்விகள் தானே! அறிவொளி தான் முடிவெடுப்பார்; அவர்தாம் சமையல்காரர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்வார் என்கிறீர்களா? சரியாகச் சொன்னீர்கள். இதே போல் தான் நகைக்கடைக்காரர் – மென்பொருள் நிறுவன எடுத்துக்காட்டும்!

நகைக்கடைக்காரர் – மென்பொருள் நிறுவன எடுத்துக்காட்டில் – முந்தைய பதிவின் கடைசியில், நம் முன்னால் நிற்கும் கேள்விகள்:

  • நகைக்கடைக்காரரைப் போய் நம்முடைய மென்பொருள் நிறுவனத்தில் இருந்து யார் பார்ப்பார்கள்?
  • இந்த ஆவணப்படுத்தும் வேலையை வாடிக்கையாளர் செய்வாரா, வாடிக்கையாளரைப் போய்ப் பார்க்கும் நம்முடைய ஆள் செய்வாரா?
  • அந்த ஆவணத்தில் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும்?
  • உருவாக்கப்படும் ஆவணம் – சரியாகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான உறுதி என்ன?

இவற்றை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.

  • நகைக்கடைக்காரரைப் போய் நம்முடைய மென்பொருள் நிறுவனத்தில் இருந்து யார் பார்ப்பார்கள்?

மென்பொருள் நிறுவனத்தில் இருந்து நகைக்கடைக்காரரைப் போய்ப் பார்ப்பவருக்கு

  • நகைக்கடை வியாபாரம் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், நகைக்கடை முதலாளி சொல்லும் விவரங்கள் புரியாமல் போய் விடும்.
  • அந்த விவரங்களைக் குறிப்பெடுத்து, நம்முடைய பொறியாளர்களுக்குப் புரியும் வகையில் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
    இந்தத் திறமைகளைக் கொண்டவரை நம்முடைய வாடிக்கையாளரின் (நகைக்கடைக்காரரின்) வியாபாரம் பற்றி நன்கு தெரிந்தவர் என்று சொல்லலாம் தானே! இப்படிப்பட்ட திறமைகளைக் கொண்டவரைத் தான் நிறுவனங்கள் வாடிக்கையாளரைச் சந்திக்க அனுப்புகின்றன. அவர்களுக்கு ‘வணிக ஆய்வாளர்’ (‘பிசினஸ் அனலிஸ்ட் (Business Analyst)’) என்று பெயர். சில நிறுவனங்களில் இந்த வேலையை மேலாளர் நிலையில் உள்ள ஊழியர்கள் செய்வார்கள்.
  • இந்த ஆவணப்படுத்தும் வேலையை வாடிக்கையாளர் செய்வாரா, வாடிக்கையாளரைப் போய்ப் பார்க்கும் நம்முடைய ஆள் செய்வாரா?நீங்கள் கடைக்குப் போய் வரிசையாகப் பல பொருட்கள் வேண்டும் என்று ஒவ்வொன்றாகச் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது வாடிக்கையாளராகிய உங்கள் கடமையா? கடைக்காரரது கடமையா? கடைக்காரரது தானே!இங்கும் அதே நிலை தான்! நகைக்கடைக்காரரைப் போய்ப் பார்க்கும் நம்முடைய ஊழியர் தான், விவரங்களைத் தொகுத்து எழுதியோ ஆவணப்படுத்தியோ வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அந்த ஆவணத்தில் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும்?வாடிக்கையாளரது தேவைகள் அனைத்தும் ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். நாம் பார்த்த எடுத்துக்காட்டின் படி, நகைக்கடைக்கு இணையத்தளம் வடிவமைக்கும் வேலையைப் பற்றிய முழு விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • உருவாக்கப்படும் ஆவணம் சரியாகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான உறுதி என்ன?வாடிக்கையாளர் தேவை ஆவணத்தின் அடிப்படையில் தான் மொத்தத் திட்டப்பணியும் அமைந்திருக்கும். எனவே, இந்த ஆவணத்தை நிறுவனத்தில் உள்ள மூத்த ஊழியர்கள் (முதுநிலை வணிக ஆய்வாளரோ முதுநிலை மேலாளரோ) ஒரு முறைக்கு இருமுறை நன்கு ஆராய்ந்து பார்ப்பார்கள். அவர்கள் பார்த்து, ஆராய்ந்து, ஒப்புக்கொண்ட பிறகு – இந்த ஆவணம் திட்டப்பணியில் இருக்கும் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும்.

சாப்ட்வேர் உருவாக்கம் எங்கு தொடங்குகிறது?

ஒரு சாப்ட்வேர் உருவாகும் முதல் இடம் – இந்த ஆவணமாக்கல் இடம் தான்! ஆக, இது வரை நாம் அறிந்து கொண்டவை

* வாடிக்கையாளர் தேவைகளை அறிய நம்முடைய ஊழியர் வாடிக்கையாளரைப் பார்த்து முழு விவரங்களையும் சேர்ப்பார்.

* சேர்த்த விவரங்களை ஆவணமாக்கி முதுநிலை ஊழியர்கள் பார்வைக்குக் கொடுப்பார்.

* அவர்கள் ஒப்புதலுக்குப் பிறகு ஆவணம் – ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும்.

இது தான் சாப்ட்வேர் உருவாக்கத்தின் தொடக்கப் பகுதி ஆகும். இந்த ஆவணத்தை வைத்துக் கொண்டு ஊழியர்கள் என்ன செய்வார்கள்? ஊழியர்களுக்கு அணித்தலைவராக இருப்பவர் என்ன செய்வார்? தொடர்ந்து பயணிப்போம்!