தரம் என்றால் என்ன என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தோம். யோசித்துப் பார்த்தீர்களா? தரம் என்று எதைச் சொல்வது? விலை அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தரமானது என்று சொல்லலாமா? பொது நிலையில் அது சரி என்று தோன்றினாலும் உண்மை அதுவாக இருக்காது. விலை அதிகம் என்பதோடு தரமும் இல்லாத பொருட்கள் ஏராளம் சந்தையில் கிடைக்கின்றன. சரி! குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்கள் தரமற்றவை என்று சொல்ல முடியுமா? அப்படியும் வரையறுத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால், தரமான சில பொருட்கள் குறைந்த விலையில் நமக்குக் கிடைக்கின்றன. சரி! இதையும் விட்டு விடலாம்.
இலவசமாகக் கிடைக்கும் பொருட்களைத் தரமற்றவை என்று ஒதுக்கி விடலாமா? அப்படியும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், விலை கொடுத்து வாங்கும் பல மென்பொருட்களை விட, இலவசமாகக் கிடைக்கும் வி எல் சி மீடியா பிளேயர், பயர்பாக்ஸ், லினக்ஸ் எனக் கட்டற்ற பல மென்பொருள்கள் தரமாக இருக்கின்றன. எனவே, இதனால் சகல மாணவர்க்கும் அறிவிப்பது என்னவென்றால், விலைக்கும் தரத்திற்கும் வரையறுக்கப்பட்ட எந்தத் தொடர்பும் கிடையாது.
சரி! ஒரு பொருளைத் தரமான பொருள் என்று எப்போது சொல்வீர்கள்? ஒரு பொருள் எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்தால் அதைத் தரமான பொருள் என்று சொல்லலாம். அப்பொருளில் சிற்சில குறைபாடுகள் இருக்கலாம்; தவறில்லை. ஆனால் வாடிக்கையாளர் எதை எதிர்பார்த்து அப்பொருளை வாங்குகிறாரோ அந்த முதன்மையான எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட வேண்டும். இந்த எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மாறலாம்.
நீங்கள் ஓர் அலைபேசி வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள், உங்கள் அம்மாவிற்கோ அப்பாவிற்கோ வாங்கும் போது உங்களுடைய முதன்மை எதிர்பார்ப்பு – பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். அதே அலைபேசியைக் கல்லூரியில் படிக்கும் உங்கள் தம்பிக்கோ தங்கைக்கோ வாங்கினால், எதிர்பார்ப்பு மாறிவிடும்.
பயன்படுத்தக் கடினமாக இருந்தாலும் பரவாயில்லை – இணையம் முதலிய எல்லா வசதிகளும் இருக்க வேண்டும் என்பதாக இருக்கும். சரிதானே! எல்லா வசதிகளுடன் கூடிய அலைபேசி வாங்கும் போது அதில் பேட்டரி நீண்ட நேரம் நிற்காமல் போகலாம். ஆனால் பேட்டரி நிலைத்து நிற்க வேண்டும் என்பது உங்களுடைய அடிப்படைத் தேவையில்லை. எனவே ஏற்றுக்கொள்ளத் தயங்க மாட்டீர்கள். சரி தானே!
எனவே, தரம் என்பதற்கு,
- வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவு செய்வது
- சரியான பொருளுக்குச் சரியான விலை கொண்டு சரியான வசதிகளைக் கொடுப்பது
- குறைகள் ஏதுமின்றிப் பொருள் இருப்பது (அல்லது கண்ணுக்குத் தெரியாத குறைகளை மட்டும் கொண்டிருப்பது)
எனப் பல விளக்கங்களைக் கொடுக்கலாம்.
இந்தத் தரம், வெளியாகும் மென்பொருளில் இருக்கிறதா என்று சோதிப்பது தான் சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படையாகும். சரி! டெஸ்டிங் ஏன் செய்கிறோம் என்னும் அடிப்படையைப் புரிந்து கொண்டீர்கள்! சாப்ட்வேர் என்றால் என்ன? அதில் டெஸ்டிங்கின் அடிப்படைகள் என்னென்ன? பேசுவோம்!