Tamil Stories for English Translation

கதை #1:

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு ஒரு நரியும் கழுதையும் வாழ்ந்தன. அவை இரண்டும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அந்த உடன்படிக்கையில் இரண்டு கருத்துகள் இருந்தன.

1) இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும்
2) ஆபத்து வந்தால் சேர்ந்து போராடுவது

இவைதாம் அந்தக் கருத்துகள்.

ஒருநாள் நரி நடக்கத் தொடங்கியது. அது கழுதையின் இருப்பிடத்தை நோக்கி நடந்தது. கொஞ்ச தூரம் நரி நடந்தது. அப்போது தான் நரி ஒரு சிங்கத்தைப் பார்த்தது. சிங்கத்தைக் கண்டு அந்த நரி நடுங்கியது. எப்படித் தப்பிக்கலாம் என யோசித்தது.

நரி சிங்கத்திடம் பேசியது. “மன்னாதி மன்னா! என் உடல் சிறியது. என்னைச் சாப்பிட்டு உங்கள் பசி அடங்காது. கொஞ்சம் பொறுத்திருங்கள். என் நண்பன் ஒரு கழுதை. அவனைப் பிடித்துச் சாப்பிடுங்கள். அதற்கு நான் உதவுகிறேன். அவன் உடல், உங்களுக்கு மூன்று நாட்கள் உணவு” என்று சொன்னது. சிங்கமும் அதை ஒத்துக் கொண்டது.
நரி, சிங்கத்தை ஒளிந்து கொள்ளச் சொன்னது. பிறகு, நரி கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.

“நண்பனே! இரை தேடச் செல்லலாமா?” எனக் கழுதையை நரி கேட்டது. பிறகு, கழுதையுடன் சிங்கம் இருந்த இடத்திற்கு வந்தது. அப்போது சிங்கம் கழுதை மீது பாய்ந்தது. அதைக் கொன்று தின்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்தது.

உடனே நரி பதறிவிட்டது. “மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பித்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!” என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.

“நீ நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுத்து விட்டாய். எனவே உன்னை நம்ப முடியாது. நாளை நீ என்னையும் காட்டிக் கொடுத்து விடுவாய். இது எனது ஆழமான சந்தேகம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது” என்று கூறியது சிங்கம். பிறகு, கழுதையயும் கொன்றது சிங்கம்.

நீதி: கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்குத் தீமை தான் ஏற்படும்.

கதை #2:

அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அங்கு வந்தது. அப்போது பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன. அதில் ஒரு மானும் இருந்தது.

“ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி வருகிறீர்கள்?” என்று மானிடம் கேட்டது கழுதை. “இந்தக் காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைப் பார்த்துத் தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று மான் கூறியது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை பெருமையாக நினைத்தது. நினைத்தபடியே, கழுதை நடந்து போனது. அப்போது அது ஓர் ஓடையைப் பார்த்தது.

அங்குத் தண்ணீர் இருந்தது. கழுதை தண்ணீர் குடிக்க அங்குப் போனது. அங்கே சில வேட்டைக்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள், மான், புலி, சிங்கம் ஆகிய விலங்குகளின் தோல்களை வைத்திருந்தார்கள். அந்தத் தோல்களைப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தார்கள்.

அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஓர் ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்தது. பிறகு தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்தக் கழுதை – சிங்கம் போலவே இருந்தது. அதனால், மற்ற விலங்குகள் கழுதையைப் பார்த்து பயந்தன.

இதைப் பார்த்து கழுதைக்குச் சிரிப்பு வந்தது. தன்னைப் பார்த்து எல்லாரும் பயப்படுகிறார்கள் என்று அது நினைத்தது. இப்படியாகக், கழுதைக்கு கர்வம் வந்தது.

சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் நடந்து கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது. அந்த நரியைப் பயமுறுத்த நினைத்தது. நரியின் பக்கத்தில் போனது. நரி பயந்து விட்டது. “சிங்க ராஜா! நான் தெரியாமல் இங்கே வந்து விட்டேன். இனிமேல் இந்தக் காட்டிற்கே வர மாட்டேன்.” என்று கழுதையிடம் கூறியது நரி.

ஆனால், கழுதை கேட்கவில்லை. அது “ங்கெ ங்கெ” என்று கத்தியது. இப்போது நரி கழுதையைக் கண்டுபிடித்துவிட்டது. அதற்குப் பிறகு, கழுதையை நரி மதிக்கவேயில்லை.

“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.

அதற்கு நரியோ, “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாய். ஆனால் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.

கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது.

நீதி: நாம் நாமாக இருப்பதால் தான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.

கதை #3:

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை வளர்த்து வந்தார்கள். அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

“என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்?” என்று கேட்டது.

அதற்குக் காகம், மனிதர்கள் மற்ற பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுக்கிறார்கள்; என்மீது கல் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது.

“இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள்” என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்! என்று சொன்னது காகம்.

உண்மைதான்! என்றது நாய்க் குட்டி

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்க்கிறார்கள். அதற்குப் பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் எங்களிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்கின்றன. இருந்தாலும் எங்களைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

“ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் நல்ல குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் சில தீய குணங்களும் இருக்கின்றன. அதனால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள்” என்று கூறியது நாய்க்குட்டி

“அப்படி என்ன தீய குணங்கள்?” என்று கேட்டது காகம்.

“திருடுதல், ஏமாற்றுதல்” என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும் அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.

கதை #4:

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.

ஒரு நாள் இருவரும் தேன் எடுக்க நினைத்தார்கள். அதற்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், ”நீ எதைப் பற்றியும் பயப்படாமல் என்னுடன் வா. என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.

அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்தக் கரடி எதிரே வந்து கொண்டிருந்தது.

கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. ஓடத் தொடங்கிய சில நொடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.

சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது. என்ன செய்வது என்று சோமு யோசித்தான். அப்படியே கவலையாகி விட்டான். எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று அவனுக்குத் தோன்றியது. , பின்னர் கீழே விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டான். அப்படியே இறந்தவனைப்போல் படுத்துக் கொண்டான்.

அப்பொழுது கரடியும் அங்கு வந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்தது கரடி. கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. இதை மரத்தின் மேல் இருந்து ராமு பார்த்தான். கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாகப் புரிந்து கொண்டான். பிறகு ராமு இறந்தவன் என்று கரடி நினைத்துக் கொண்டது. அப்படியே அவனை விட்டு விட்டது.

கரடி போவதை ராமு பார்த்தான். பிறகு மரத்தின் கீழே இறங்கி வந்தான். வந்து சோமுவை எழுப்பினான். ”கரடி சென்று விட்டது. இனி எழுந்திரு! நாம் தப்பி விட்டோம்” என்று ராமு கூறினான்.

சோமுவும் எழுந்தான். கரடி நடந்து போனதைப் பார்த்தான். அவனுக்கு ஒரே சந்தோஷம்.

ராமு சோமுவிடம், ”கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?” என்று கேட்டான்.

அதற்கு சோமு, ”ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது” என்றான்.

இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு வேண்டாம் என்று சொன்னான். சொல்லி விட்டு, தனியே நடந்து சென்றான்.
நீதி: ஆபத்தில் உதவாதது நட்பல்ல.

கதை #5:

அது மதிய வெயில் நேரம். அங்கே ஒரு வெட்டுக்கிளி இருந்தது. அது அங்கும் இங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அங்கு வந்தது. அது அரிசி ஒன்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போனது.
வெட்டுக்கிளி அதைப் பார்த்தது. பிறகு அது எறும்பிடம் “இப்போது என்ன அவசரம்? சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.

அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து விடும். மழைக்காலம் வந்து விடும். மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போதே நான் சேமிக்கிறேன்.” என்றது. இதைக் கேட்டு வெட்டுக்கிளி சிரித்தது.

பிறகு, “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கின்றன, நான் விளையாடச் செல்கிறேன்” என்று சொன்னது. அப்படியே சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.

நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது. எறும்பு வீட்டிலேயே இருந்தது. அதற்கு முன்னர் சேர்த்த உணவு இருந்தது. ஆனால் வெட்டுக்கிளிக்கோ உணவு எதுவும் கிடைக்கவில்லை. அது மழையில் நனைந்தது.
அப்போது வெட்டுக்கிளிக்கு எறும்பின் நினைவு வந்தது. எறும்பின் வீட்டிற்கு வந்தது வெட்டுக்கிளி. வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.

எறும்பு – தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளிக்குக் கொடுத்தது . “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பி இருக்காதே! வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி: கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாகப் பலன் தரும்.

கதை #6:

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம். வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தூதர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள் வந்தார்கள். அவர்கள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு, பொதுமக்கள் மன்னருக்கு பரிசளித்தனர். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

பெரிய பொட்டலத்தைப் பிரிக்கச் சொல்லி எல்லோரும் கேட்டார்கள். மன்னரும் தெனாலிராமனைக் கூப்பிட்டார். பொட்டலத்தைப் பிரிக்கச் சொன்னார்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் குவிந்தன. ஆனால், பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் அவையில் பேசத் தொடங்கினார். “தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்று மன்னர் அவையினரைப் பார்த்துக் கூறினார். பிறகு தெனாலிராமன் பக்கம் திரும்பினார். “ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.

“அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

“அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!” என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்தார். தெனாலிராமனை ஆரத் தழுவினார். “ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.”

“பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

கதை #7:

ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.

சிறிது காலத்திற்குப் பிறகு அந்தச் செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதைப் பறித்தான். அவன் தன் தாய்க்குப் பரிசாக கொடுக்க நினைத்தான். நினைத்தபடியே பூக்களைப் பறிக்கத் தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனைப் பிடித்தார்கள். அவனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களைப் பார்த்தான். “என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்?” என்று கேட்டான்.

அவர்களோ! “உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடி விட்டான். அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரிடம் அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களைப் பார்” என்று சொன்னார்கள்.

தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பினான். தெனாலி சிறுது நேரம் யோசித்தார். பிறகு தான் அணிந்திருந்த மேலாடையைக் கழற்றினார். அதைத் தன் மகன் மேல் போர்த்திவிட்டார்.

இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்தத் துணி என் மகனைக் காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவ்வொரு பூவாகச் சாப்பிட ஆரம்பித்தான். மேலாடை இருப்பதால் அவன் பூக்கள் சாப்பிட்டதைக் காவலர்கள் பார்க்கவில்லை.

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர்.

காவலர்கள் மன்னரை பார்த்து வணக்கம் சொன்னார்கள். பிறகு “அரசே! தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடினான் அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்தக் குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறினர்.

மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்தார். பின்னர் அரசர் காவலர்களைப் பார்த்து, “திருடிய பூக்கள் எங்கே?” என்று கேட்டார்.

காவலர்கள் மன்னரைப் பார்த்து, “பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளன” என்று கூறினர்.

அரசர் தெனாலி மகனைப் பார்த்தார். “உன் கைகளை காட்டு” என்று கூறினார். அவனும் வெறும் கைகளைக் காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.

மன்னர் அவனிடம் “நீ பறித்த பூக்கள் எங்கே?” என்று கேட்டார். அவனோ! மன்னரைப் பார்த்து, “நான் பூக்கள் எதுவும் பறிக்கவில்லை.” என்று கூறினான்.

மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார். தெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்குப் புறப்பட்டனர்.

கதை #8:

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலம் வந்தது. ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.

கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் போதும். சருகுகளைப் போட்டுத் தீமூட்டலாம். அதில் குளிர் காயலாம் என்று ஒரு வயதான குரங்கு சொன்னது. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்தன. அப்போது அங்கே ஒரு மின்மினிப் பூச்சி வந்தது. அது பளிச் பளிச் சென்று மின்னியது அதை ஒரு குரங்கு பார்த்தது. அந்தக் குரங்கு, “அதோ நெருப்பு போகிறது” என்று சொன்னது. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்தது. பிடித்து தரையில் போட்டது.

மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களை எடுத்தன. எடுத்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்தன. அந்த மின்மினிப்பூச்சியைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.

பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதின. ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளைப் பார்த்தது ஒரு பறவை. அது மரத்தை விட்டு கீழே வந்தது. வந்து, குரங்குகளிடம் பேசத் தொடங்கியது அந்தப் பறவை.

“நண்பர்களே மின்மினிப் பூச்சி அது! அது நெருப்பு கிடையாது. மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. எனவே ஊதுவதை நிறுத்துங்கள். வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறியது. “உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடு! உன் வேலையைப் பார்” என்று குரங்குகள் பதில் சொல்லின. பிறகு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதின. ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.

பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபபட்டது. திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்றன குரங்குகள். அவை, பறவை மீது பாய்ந்தன. அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.

பாடம் : முட்டாளுக்கு புத்தி சொன்னால் வினைநமக்குதான்…

கதை #9:

ஒருவன் சோம்பேறியாக இருந்தான். சோம்பல் ஏழ்மையைக் கொண்டுவந்தது. ஏழ்மையைப் போக்குவது எப்படி என அவன் யோசித்தான். ஒரு மகானைச் சந்திக்க முடிவு செய்தான். அவரைச் சந்தித்து உதவுமாறு கேட்டான்.
மகான், அவனுடைய சோம்பேறித்தனத்தைப் புரிந்து கொண்டார். அவர், அவனிடம் ஒரு கதை சொன்னார் – ஒரு மரங்கொத்திப் பறவை இருந்தது. அதற்குக் கூரிய அலகு இருந்தது. அந்த அலகால், மரத்தை டொக் டொக்கென்று கொத்தியது. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். “இது வீண் வேலை அல்லவா? மூடப்பறவையே! ஏன் மரத்தைக் கொத்திக் கொண்டிருக்கிறாய்?” என்றான். “மனிதனே! நான் உணவு தேடுகிறேன்” என்றது பறவை. பறவையைப் பார்த்துச் சிரித்தான் மனிதன். அதற்குள், மரத்தில் ஓட்டை விழுந்தது. உள்ளே புழுக்கள் இருந்தன. பறவை அவற்றை எடுத்துத் தின்றது. இப்போது பறவை மனிதனைப் பார்த்தது. “நீயும் உனக்கு வேண்டியதைத் தேடு. எல்லா இடங்களிலும் தேடு. மரத்தில் தேடு, மண்ணில் தேடு, நீரில் தேடு. கட்டாயம் கிடைக்கும். நம்பிக்கையைத் தளரவிடாதே!” என்று
சொன்னது.

கதையைக் கேட்டதும் அவன் தவறு புரிந்தது. சோம்பலை விட்டான்.

கதை #10:

ஒரு கட்டெறும்பு ஆற்றங்கரை ஓரம் வாழ்ந்தது. ஒரு நாள் ஆற்றில் அது விழுந்து விட்டது. மரத்தில் இருந்து புறா அதைப் பார்த்தது. அது ஓர் இலையைப் பறித்தது. அந்த இலையை நீரில் வீசியது. எறும்பு தத்தித் தத்தி வந்தது. இலை மேல் ஏறிக் கொண்டது. இலை கரைப்பக்கம் ஒதுங்கியது. எறும்பு புறாவுக்கு நன்றி சொன்னது.

மற்றொரு நாள், ஒரு வேடன் வந்தான். அவன் புறாவைக் குறி வைத்தான். அதைப் புறா பார்க்கவில்லை. ஆனால் எறும்பு பார்த்து விட்டது. புறாவைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டது எறும்பு. வேடன் பக்கத்தில் போனது எறும்பு. வேடனின் காலில் கடித்தது எறும்பு. வேடனுக்குச் சுருக்கென்று வலித்தது. அவன் குறி தப்பியது. ஆவென்று கத்தினான் வேடன். இந்தச் சத்தத்தைப் புறா கேட்டது. வேடனைப் பார்த்தது. உடனே பறந்து தப்பியது. பிறகு, எறும்புக்கு நன்றி சொன்னது. “நீ எனக்கு உதவினாய். நான் உனக்கு உதவினேன். இதற்கு எதற்கு நன்றி?” என்று கேட்டது எறும்பு.

அந்தச் சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது. எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.

கதை #11:

ஒரு சமயம் அந்த நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டது. குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.

இந்தச் சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் வந்தார்கள். அவர்கள் தெனாலிராமன் தோட்டத்தில் பதுங்கினார்கள். அதைத் தெனாலிராமன் பார்த்தான். உடனே வீட்டிற்கு வந்தான். தன் மனைவியிடம் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டது. பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதற்கு நாம் ஒரு காரியம் செய்வோம்” என்று சத்தமாகச் சொன்னான். திருடர்களுக்கு இது கேட்டது.

“அதற்கு என்ன செய்யலாம்?” என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.
“வீட்டிலுள்ள நகை, விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டுப் பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்” என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறினான். ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கினான். பிறகு கிணற்றுக்குள் ‘தொப்’பென்று போட்டான். அமைதியாக வீட்டுக்குத் திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், “தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாகக் கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்தது. உள்ளே இறங்கப் பயந்தான் திருடன் ஒருவன். “அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் மாற்றி மாற்றி நீரை இறைப்போம். சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்” என்று கூறினான். மற்றவர்கள் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாகத் தோட்டத்திற்குச் சென்றான் தெனாலிராமன். திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரைப் பார்த்தான். அதைத் தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்குப் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், “நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைப்போம். அப்போது பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்தான். அவர்களிடம், “நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!” என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்று பயந்தனர். திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

கதை #12:

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் இருந்தார். அவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.

புலவரின் நிலையைப் பார்த்தார் அந்த கிராமத்தின் தலைவர். அவர் புலவரிடம் சென்று, “நம் நாட்டின் அரசரைப் புகழ்ந்து பாடு! மன்னர் பரிசு கொடுக்கிறார். அந்தப் பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலாமே” என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று நினைத்தார் புலவர். மன்னரைப் பார்க்க அரண்மனை நோக்கிப் பயணித்தார்.

சிறிது நேரத்தில் புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.

மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், “உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்” என கூறினார்.

புலவரும் குடும்பத்தைப் பற்றி யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்கப் பலகை இருப்பதைப் பார்த்தார். “அரசே எனக்குப் பெரிதாக எதுவும் வேண்டாம். அங்கே சதுரங்கப் பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ஆம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வையுங்கள். பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாக்கினால் போதும். அதைப் பரிசாக ஏற்றுக்கொள்வேன்” என்று கூறினார்.

மன்னர் புலவரைப்பார்த்து, “நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?” என்று கேட்டார்.

புலவரோ “அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்” என்று கூறிவிட்டார். அரசனும் சரி என கூறிவிட்டார்.

பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், “புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.

10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடானுகோடிகளைத் தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலிப் புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவற்றை உணர்ந்தார் அரசர். அவர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்தப் புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறினார். பிறகு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி: கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

நன்றி: இணையத்தளங்கள்